மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் பி.டி.அரசக்குமார் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மாரிராஜா, ரவி, மணிகண்டன், சிவக்குமார், ராஜ்குமார், ஆறுமுககடவுள், தியாகராஜன், செல்லூர் போஸ், செக்கானூரணி கணேசன், செல்லம்பட்டி கனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பி.டி.அரசக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தேவர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளும் தேவர் சமுதாயத்திற்கு தீண்டதகாத கட்சியாக மாறிவிட்டன.
எனவே 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதிய வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். தேசிய பார்வர்டு பிளாக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ள 60 தொகுதிகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும். முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழகத்தின் உரிமைகளை பெற்று தரவேண்டும்.
சுதந்திர போராட்ட வேங்கை நேதாஜி குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை எல்லாம் மத்தியில் உள்ள நரேந்திரமோடி அரசு நிச்சயம் செய்யும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மூலம் தமிழகத்திலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்த தேசிய பார்வர்டு பிளாக் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.
தென் மாவட்டத்தில் கணிசமான இடங்களில் தேசிய பார்வர்டு பிளாக் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இதற்காக தென் மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பு தொகுதிகளை கண்டறிந்து நிர்வாகிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கவும், மக்களிடம் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் கொள்கைகளை எடுத்து கூறவும் சட்டசபை தொகுதி வாரியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment