தமிழர்கள் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதாக, ஜல்லிக்கட்டுப் பேரவை மேனகா காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவர் பி. ராஜசேகர் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களது பாரம்பரிய வீரவிளையாட்டாகும். புராணக் காலத்திலும், சிந்து சமவெளி நாகரிக கல்வெட்டுகளிலும் தமிழர்களது வீரவிளையாட்டு குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டுகள் தில்லி அருங்காட்சியகத்திலும் உள்ளது.
மேலும், கிருஷ்ண புராணம், பாகவத புராணம், நாரத புராணம் உள்ளிட்ட 18 புராணங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகியன தமிழர்களது வீரவிளையாட்டு என்பதற்கான குறிப்புகள் ஆதாரமாகக் காணப்படுகின்றன.
ஹிந்துகளின் கோயில் வழிபாட்டு முறைகளிலும் ஜல்லிக்கட்டு தமிழர்களது பாரம்பரிய கலாசாரம் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.
புராண வரலாற்றையோ, தமிழர் கலாசார பழக்கவழக்கங்களையோ அறியாமல், ஜல்லிக்கட்டை மேற்கத்திய கலாசாரம் என மேனகா காந்தி கூறியிருப்பது வருத்தத்துக்குரியது.
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்தவர் தான் மேனகா காந்தி. வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், அதை கெடுக்கும் நோக்கத்துடன் மேனகா காந்தி செயல்படுவதற்கு, ஜல்லிக்கட்டுப் பேரவை தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment