Wednesday, March 7, 2012

எல்.இ.டி. பல்பு மூலம் 10 மடங்கு மின்சாரம் மிச்சம்

வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் 10 மடங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை (அசோசம்) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 16 பைசா மிச்சமாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, வீடுகளில் 60 வாட் கொண்ட குண்டு பல்பை 16 மணி நேரம் எரித்தால், 1 யூனிட் மின்சாரம் செலவாகும். இதே இடத்தில் 6 வாட்களைக் கொண்ட எல்.இ.டி. பல்பை பயன்படுத்தினாலே, குண்டு பல்புகளுக்கு இணையான வெளிச்சத்தைத் தரும். அதேநேரம், 6 வாட் எல்.இ.டி பல்பை 166 மணி நேரம் பயன்படுத்தினால்தான் 1 யூனிட் மின்சாரம் செலவாகும்.

இதன்படி, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் 10 மடங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இதுபோல் சி.எஃப்.எல். பல்புகளும் 20 சதவீத மின் சக்தியை பயன்படுத்தி, குண்டு பல்புகளுக்கு இணையான வெளிச்சத்தைக் கொடுக்கும்.

இதை நாடு முழுவதும் உள்ள மக்கள் பின்பற்றுவதன் மூலம், ஆண்டுக்கு 35 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு ரூ. 4.7 லட்சம்

கோடி மிச்சமாகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விலையைப் பொருத்தவரை குண்டு பல்புகளைக் காட்டிலும் சி.எஃப்.எல். பல்புகள் 10 மடங்கும், எல்.இ.டி. பல்புகள் 16 மடங்கும் அதிகமுடையவை. 60 வாட் கொண்ட குண்டு பல்பின் விலை ரூ. 15. ஆனால், 6 வாட் கொண்ட எல்.இ.டி. பல்பு ரூ. 250 வரை விற்பனை செய்யப்படும். இதனால், ஏழை மக்களால் இதை வாங்குவது கடினம்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: எல்.இ.டி. பல்புகளும், சி.எஃப்.எல். பல்புகளும் மின்சாரத்தை பன்மடங்கு மிச்சப்படுத்தும் என்றபோதும், வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அவற்றை பயன்படுத்த முடியாது. படிக்கும் அறைகளில் இவற்றை பயன்படுத்த முடியாது.

மேலும், சி.எஃப்.எல். பல்புகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் பெரும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தக்கூடியது. பயனற்று போகும் சி.எஃப்.எல். பல்புகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல வெளி நாடுகளில் இந்தப் பல்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வீட்டில் படிக்கும் அறைகளைத் தவிர பிற பகுதிகளில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தலாம். ஆனால் அதன் விலை, குண்டு பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளைப் விட பல மடங்கு அதிகம். எனவே, எல்.இ.டி. பல்புகளை மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

No comments: