Saturday, October 27, 2012

மருதுபாண்டியர் சமாதியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி: பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பல்வேறு கட்சி பிரமுகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் போன்றவற்றின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. 

நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் தலைமையில் சூப்பிரண்டுகள் பன்னீர் செல்வம், ஈஸ்வரன், சேகர், அண்ணாத்துரை ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. 

கமுதியிலும் மருதுபாண்டியர் நினைவு தினவிழா நடைபெற்றது. அங்குள்ள மருது சிலைகளுக்கு அகமுடையார் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. 

அ.தி.மு.க. சார்பில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், கமுதி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், கமுதி யூனியன் தலைவர் பாலு, பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தி.மு.க. சார்பில் மாநில விவசாய அணி துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், ஒன்றிய பொறுப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் சார்பில் பி.கே.கிருஷ்ணன், ராமமூர்த்தி, பொன்னுச்சாமி தேவர், சிதம்பர ராஜன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

No comments: