Wednesday, October 24, 2012

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை – சின்மயி


மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்….
ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.
நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.
ஐயங்கார் குடும்பம்
சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!
உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.
இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.
வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்
என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.
திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.
தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்
இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?
சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை
அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் சைவம்” என்று பதில் கூறினேன். “மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, “நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு “:)” போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன்.
மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .
அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு
பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ‘FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.
என் தாய் வருந்தினார்
என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.
இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.
என் அம்மாவையும் திட்டினார்கள்
இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.
அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.
இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.
இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

No comments: