Sunday, May 19, 2013

கடலூரில் சீமான் கூட்டத்தில் போலீசார்- நாம் தமிழர் கட்சியினர் தள்ளு- முள்ளு

கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது.

கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து அதே திருமண மண்டபத்தில் மாலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இளம் புரட்சியாளர் விருது, தகைசால் ஆன்றோர் விருது உள்பட 8 விருதுகள் வழங்கப்பட்டன. இறுதியில் சீமான் பேசத் தொடங்கினார்.

அவர் அனுமதிக்கப்பட்ட இரவு 10 மணியை கடந்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் மண்டபத்துக்குள் நுழைந்து கூட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறினர். உடனே கட்சி நிர்வாகிகள் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீசாருக்கும், நாம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். தொடர்ந்து சீமான் இரவு 10.20 மணி வரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் போலீசார் திருமண மண்டபத்துக்குள் உள்ளே சென்று கூட்டத்தை முடிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து சீமான் கூட்டத்தை முடித்துவிட்டு மற்றொரு வாசல் வழியாக மண்டபத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: