Wednesday, May 29, 2013

சசிகலா உறவினர் வெங்கடேஷ் நில மோசடி வழக்கில் கைது

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷ், நேற்று, நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வரை, முதல்வரின் நம்பிக்கை பெற்ற இவர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலராகவும், அதன்பின், ஜெ., பேரவை மாநில செயலராகவும் செயல்பட்டார்.




இவர் மீது எழுந்த சில புகார்களால், அப்பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு சொந்தமான நிலம், தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ளது. அவரது நிலத்துக்கு அருகே, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் வெங்கடேசுக்குச் சொந்தமான இடமும் உள்ளது.



விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, வெங்கடேஷ் வேலி அமைத்ததாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, 2012ல் விஸ்வநாதன், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனடிப்படையில், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடந்து வந்தது.



இவ்வழக்கு தொடர்பாக தமிழ்ப்பல்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், நேற்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றனர். வெங்கடேஷை கைது செய்து, தஞ்சாவூருக்கு நேற்றிரவு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், சசிகலா, நடராஜன், திவாகர், ராவணன் ஆகியோருக்கு அடுத்து, "பவர்' சென்டராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




நேற்று முன்தினம், தஞ்சாவூரில் வெங்கடேஷின் தாய் மாமன் மகன் திருமணம் நடந்தது; இதில் வெங்கடேஷ், தினகரன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.





No comments: