Friday, May 24, 2013

சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த 2011ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரிமியர் லீக் தொடரிலும் பெட்டிங் கட்டியுள்ளதாகவும், அவர் ரூ. 10 லட்சத்திலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு போட்டிக்கும், ஒரு கோடி வரை பெட்டிங் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய தொடரில், சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் குருநாத் பெட்டிங் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.




இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் வின்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அடிக்கடி சென்னை அணியின் தலைமை நிர்வாகி குருநாத் மெய்யப்பனிடம் மொபைல் போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து, குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் நேற்று சென்னை வந்தனர். விசாரணைக்கு அவரை அழைக்கும் சம்மனை நேரில் அளிப்பதற்காக குருநாத் வீட்டிற்கு போலீசார் சென்ற போது அங்கு அவர் இல்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரது வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. பின்னர், மெய்யப்பன் சார்பில் அவரது மேனேஜர் சம்மனை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மும்பை போலீசார் முன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.







இந்நிலையில், ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குருநாத் மெய்யப்பன், கடந்த ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடர் முதல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், வின்டூவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒவ்வொரு போட்டியிலும், ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரை பெட் கட்டியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும், மற்ற அணி பங்கேற்ற போட்டிகளிலும் குருநாத் பெட்டிங் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.







வெளிநாட்டு வீரர்களுக்கு தொடர்பில்லை: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என டில்லி போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறுகையில், எங்களது விசாரணையில், எந்த வெளிநாட்டு வீரரது பெயரும் இல்லை. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில், 12 புக்கிகள், ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் மேலும் பல வீரர்களுக்கு தொடர்புள்ளது. ஸ்ரீசாந்துக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது என கூறியுள்ளார்.







டில்லி-மும்பை போலீசார் மோதல்: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் டில்லி மற்றும் மும்பை போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த் அறையில் கைப்பற்றப்பட்ட பொருட்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு டில்லிபோலீசார், மும்பை போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், அது தங்களின் விசாரணைக்கு தேவைப்படுவதால் கொடுக்க முடியாது என மும்பை போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், ஐந்தாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட அஜித் சாண்டிலாவுக்கு ரூ.12 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சாண்டிலாவால் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடாததால், வாங்கிய பணத்தை மூன்று செக்குகளாக திருப்பி கொடுத்துள்ளார். அதில் இரண்டு செக்குகள் பணமில்லாமல் திரும்பியுள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.







குருநாத்திற்கு கால அவகாசம்: இதனிடையே, போலீசார் முன்பு இன்று ஆஜராக வேண்டும் என குருநாத் மெய்யப்பனிற்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தான் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என குருநாத் மெய்யப்பன் கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை மும்பை போலீசார் பரிசீலனை செய்வதாகவும், இந்தியன் பரிமியர் லீக் தொடர் முடிவடையும் வரை, குருநாத்திடம் விசாரணை நடைபெறாது எனவும் கூறப்படுகிறது.







மவுனம் கலைத்த தோனி மனைவி: இந்நிலையில் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வின்டூ, சென்னை அணி கேப்டன் தோனி மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்திருந்தவாறும், சிரித்து பேசியவாறும் புகைப்படம் வெளியானது. இது குறித்து கருத்து இந்தி பாட்டு மூலம் டுவீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகத்தில் உள்ளவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அது தான் அவர்களது வேலை என சூசகமாக கூறியுள்ளார்.







தடை செய்வது தீர்வல்ல: ஸ்பாட் பிக்சிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங்., ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரை தடை செய்வது தீர்வாக அமையாது. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிருபனமானால், அவர் பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். இந்தியன் பிரிமியர் லீக் தொடரை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் தேவை என கூறினார்.





No comments: