Thursday, December 5, 2013

மதுரையில் தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப்பழியாக பெட்ரோல் குண்டு வீசி வாலிபர் வெட்டிக்கொலை

மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30–ந்தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளை சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர். அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பியபோது சிந்தாமணி அருகே கார் மீது ‘மர்ம’ கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 10–க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியை சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திரசேகரன், கார்த்திக், நாகராஜ், முத்துக்கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர். இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும்போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம். இன்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும், காரிலும் பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு இன்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர். இதனை கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் ‘மர்ம’ கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் முத்து விஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சம்ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனை யாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார். அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார்.

No comments: