நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அங்கு தொகுதிகள் கிடைக்காததால் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது.
இதே போல் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து பேசி இருந்தார். அங்கு ‘சீட்’ ஒதுக்கப்படாததால் கோபாலபுரம் சென்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அங்கும் ‘சீட்’ இல்லை என்று கூறி விட்டனர்.
இதனால் டாக்டர் சேதுராமன் தேவரின் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவனும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்.
தற்போது நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ‘விடியல் கூட்டணியை’ உருவாக்கி உள்ளார்.
இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
இது பற்றி விடியல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கார்த்திக் கூறுகையில், “இந்த கூட்டணியில் இன்னும் சில தேவரின் அமைப்புகள் இணைய இருக்கின்றது. நாங்கள் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள் யார் என்பதை மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் புரிய வைப்போம்” என்றார்.
No comments:
Post a Comment