Thursday, April 21, 2016

தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம்: "விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல்

நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள "விடியல்' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் விரைவில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவலை அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் புதன்கிழமை தில்லியில் தெரிவித்தார்.
 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, அதிமுக அணியில் இருந்து அண்மையில் வெளியேறிய டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன சக்தி ஆகியவை சேர்ந்து "விடியல் கூட்டணி' என்ற அணியை சில தினங்களுக்கு முன்பு உருவாக்கின. இந்த நிலையில், "விடியல்' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல், லோக் ஜன சக்தி மாநிலத் தலைவர் வித்யாதரன், பொதுச் செயலாளர் ஓ.எஸ்.அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
 இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் கூறியதாவது: எங்கள் கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் ராம் விலாஸ் பாஸ்வானை சந்தித்து தமிழக தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசியல் சூழ்நிலை, தேர்தலுக்கான கூட்டணியின் செயல் திட்டம் குறித்து அவரிடம் விளக்கினோம். தேர்தல் உத்திகள் தொடர்பாக அவரும் சில யோசனைகளைத் தெரிவித்தார். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் விரைவில் பிரசாரம் செய்ய ராம் விலாஸ் பாஸ்வான் விருப்பம் தெரிவித்தார்.
 எங்கள் கூட்டணியில் சேருவதற்கு மேலும் சில கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குள் சிக்கல் இல்லை. தேர்தலையொட்டி கூட்டணியின் செயல்திட்டம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றார் கார்த்திக்.
 பாஜக அணியில் பிளவா?: இந்த நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி, தமிழகத்தில் வேறு அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்குக் காட்டும் ஆர்வம், பாஜக அணி மாநில அளவில் பிளவுபட்டுள்ளதாகக் கருதலாமா? என்று மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, "மத்தியில் பாஜக அணியில்தான் லோக் ஜன சக்தி உள்ளது. விடியல் கூட்டணிக்கு ஆதரவாக ராம் விலாஸ் பாஸ்வான் பிரசாரம் செய்யும் தகவலே நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரிகிறது. முழு விவரத்தையும் அறிந்த பிறகே என்னால் கருத்துக் கூற முடியும்' என்றார்.

No comments: