குற்றப் பரம்பரை படத்தை ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
2007-ல் ஒரு பேட்டியின்போது இயக்குநர் பாரதிராஜா இவ்வாறு கூறினார்:
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்றார். ஆனால் அவர் அப்படத்தைத் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதை தலைப்பில் இயக்குநர் பாலா படம் எடுக்க முன்வந்ததாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு எற்பட்டது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலா இப்படத்தை எடுப்பதாகவும் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலாவும் இயக்க உள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தான் எடுப்பதாக இருந்த குற்றப் பரம்பரை படத்தினைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குற்றப் பரம்பரை எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதிராஜா நடித்து இயக்கும் இப்படத்தின் பூஜை உசிலம்பட்டியில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அவர் பேசியதாவது:
கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ம் ஆண்டு இறந்த மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் படுகொலையை 'குற்றப் பரம்பரை' படம் மூலமாக சொல்ல வருகிறேன். இது குற்றப் பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை.
நான் பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்தப் படத்தை எடுக்கவே என்னைக் கடவுள் நியமித்துள்ளார். ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று பேசினார். பாலா எடுக்கவுள்ள குற்றப் பரம்பரை குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment