Thursday, May 5, 2011

பின்லேடனை தொடர்ந்து தாவூத் இப்ராகிம் சிக்குவானா? தேடப்படும் 2-வது சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு

மும்பையில் 1980-90 களில் நிழல் உலக தாதாவாக இருந்தவன் தாவூத் இப்ராகிம். இவன் இந்தி சினிமா நட்சத்திரங்களையும், தொழில் அதிபர்களையும், பெரும் செல்வந்தர்களையும் மிரட்டி பணம் பறித்தான். கள்ளக் கடத்தலில் ஈடுபட்டான். அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டான்.

சர்வதேச கடத்தல் கும்பலுடன் சேர்ந்து போதை பொருள்களை கடத்தினான். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது.

1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் 257 அப்பாவிகள் பலியானார்கள். 713 பேர் கை-கால்களை இழந்தனர். இது இந்தியாவை அதிரச் செய்த முதலாவது பெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் ஆகும்.

இந்த சம்பவத்தில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பதை மும்பை போலீஸ் கண்டுபிடித்தது. ஆனால் முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் தப்பி ஓடிவிட்டான். அவன் பாகிஸ்தான், துபாய் போன்ற நாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டே தனது ஆட்கள் மூலம் இந்தியாவில் நாசவேலையை தொடர்ந்து செய்து வந்தான்.

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக இருப்பது இந்திய உளவுதுறைக்கு தெரிய வந்தது. தாவூத் இப்ராகிமை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று கூறி கை விரித்து விட்டது.

தாவூத் இப்ராகிம் தொடர்ந்து போதை பொருள் கடத்தல், மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால் அவன் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். அவனை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. என்றாலும் தாவூத் இப்ராகிம் பிடிபடாமல் இருக்கிறான்.

தற்போது அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் 10 ஆண்டுகளாக தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் ஆடம்பர பங்களாவில் வசித்து வந்துள்ளார். இதற்கு முன் பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வந்தது. இப்போது பாகிஸ்தானிலேயே கொல்லப்பட்டதன் மூலம் பின்லேடன் அங்கு தலைமறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அரசே பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கும் என்ற சந்தேகமும் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்காமலேயே பின்லேடனை அமெரிக்கா கொன்று விட்டது.

எனவே பின்லேடனைப் போல தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தாவூத் இப்ராகிமை தேடப்படும் 2-வது சர்வதேச தீவிரவாதியாக இன்டர்போல் சர்வதேச போலீஸ் அறிவித்துள்ளது.

உலக நாடுகள் தேடும் குற்றவாளிகள் பட்டியலை லண்டனைச் சேர்ந்த “தி கார்டியன்” பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் பின்லேடன் இருந்தான். அவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து மெக்சிகோவைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரன் எல்சாபோ குஸ்மான் முதலிடத்தில் உள்ளான். அவனை அடுத்து 2-வது இடத்தில் தாவூத் இப்ராகிம் பெயர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது.

தாவூத் இப்ராகிம் மீது இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் கொலை, போதை பொருள் கடத்தல் உள்பட 5000 வழக்குகளில் தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தவிர அல்கொய்தா இயக்கத்துடனும் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பதாக வாஷிங்டனில் அமெரிக்க உளவு பிரிவு அதிகாரி கூறினார்.

பின்லேடனைத் தொடர்ந்து தாவூத் இப்ராகிம் பிடிபடுவானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்தியாவால் தேடப்பட்டு பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் தீவிரவாதிகள் பட்டியலை இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் ஒப்படைத்து இருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதால் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மற்ற தீவிரவாதிகளும் ஒடுக்கப்படுவார்கள் என்று இந்தியா நம்புகிறது.

No comments: