Friday, May 20, 2011

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி, மே 19: நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து தெரியவரும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

மக்கள்தொகை கணக்கெடுக்கும் மாபெரும் பணியில் ஜாதி வாரியாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு நடத்துவது முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்காக குறைந்த விலையிலான கையடக்க கம்ப்யூட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இந்த கையடக்க கம்ப்யூட்டர் அளிக்கப்படும். இந்தக் கருவியை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடையாள அட்டை வழங்கும் (யுஐடி) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த கணக்கெடுப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிய உதவும்.

ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகங்களும் இந்திய பதிவாளர் துறையும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தும்.

No comments: