Monday, May 2, 2011

சட்டக் கல்லூரி வன்முறை: கொளத்தூர் தொகுதி வேட்பாளர் கைது

சென்னை, மே 1: சென்னை கொளத்தூர் தொகுதியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் கடந்த 2008 நவம்பர் 2-ம் தேதி இருதரப்பு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு வன்முறையாக மாறியதில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் வெளியாள்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உலக மனித உரிமை, மீட்பு மையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ""முக்கியக் குற்றவாளிகளான ஆம்ஸ்ட்ராங், வக்கீல் ரஜினிகாந்த் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக போலீஸôர் கூறுகின்றனர்; ஆனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டார். அவரை ஏன் இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை'' என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கும், வக்கீல் ரஜினிகாந்தும் சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

ரஜினிகாந்துக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சுந்தரம், வேறு நீதிபதியிடம் முன்ஜாமீன் கேட்டு ஆம்ஸ்ட்ராங் விண்ணப்பிக்கலாம் என்றார்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்ய சென்னை எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. புரசைவாக்கத்தில் ஒரு ஓட்டலில் ஆம்ஸ்ட்ராங் தங்கி இருப்பதாக அந்த தனிப்படைக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீஸôர் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்தனர்.

பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் 16-வது நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்னிலையில், சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments: