Wednesday, December 28, 2011

புயல் சென்னையை நெருங்கியது; இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகம் பெய்துள்ளது. இந்த வாரத்தில் மழை பருவ காலம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், நேற்று புயலாக மாறியது.

இதற்கு 'தானே' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 800 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த “தானே” புயல் சிறிது சிறிதாக நகர்ந்து 700 கி.மீ. தூரத்தில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி வங்க கடலில் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு புயல் நெருங்கி வந்துள்ளது. இன்று இரவுக்குள் மேலும் நெருங்கிவிடும்.

“தானே” புயல் சென்னை நெருங்குவதன் காரணமாக, இன்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். சென்னை-புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் புயல் கரையை கடக்கும் வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படும்.

50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது.

No comments: