Monday, April 23, 2012

பார்வர்டு பிளாக் கொடியேற்று விழாவில் மோதல்: பெண் உள்பட 10 பேர் கைது

திருப்பூர் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ளது பவானி நகர். இங்கு பார்வர்டு பிளாக் சார்பில் கொடியேற்று விழா நடைபெற இருந்தது. நிகழ்ச்சியில் பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் ராஜசேகர், திருப்பூர் மாவட்ட செயலாளர் கர்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. கதிரவன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




கொடியேற்று விழாவுக்கு முன்னதாக பவானி நகர பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 38), அவரது கணவர் விசுவநாதன், ராஜ் விக்னேஷ் (24) மற்றும் சிலர் கண்டித்தனர்.



இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் பார்வர்டு பிளாக் நிர்வாகிகளை தாக்கினர். இதில் பிச்சைமணி (32) உள்பட 2 பேர் காயமடைந்தனர். இந்த மோதலின் போது பார்வர்டு பிளாக் கட்சியின் கொடிக்கம்பமும் வெட்டி சாய்க்கப்பட்டது.



மோதல் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். இதற்கிடையே பார்வர்டு பிளாக்கை சேர்ந்தவர்கள் கதிரவன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பிரச்சினை பூதாகரமாகவே அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். சமரச பேச்சு வார்த்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, டி.எஸ்.பி. ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் குமார், செய்யது பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் ஆனது. இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.



மோதல் தொடர்பாக பிச்சைமணி கொடுத்த புகாரின் பேரில் ராஜேஸ்வரி, விஸ்வநாதன், ராஜ்விக்னேஷ், சுப்பிரமணி, பழனிமுருகன், முத்துக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் அவதூறு வார்த்தைகளால் திட்டியதாக தாமரைகண்ணன் என்பவர் புகார் செய்தனர். அதன் பேரில் பிச்சைமணி, ராமர், சரவணன், ராஜாராம் ஆகிய 4 பேர் கைதானார்கள். இரு தரப்பையும் சேர்ந்த மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments: