Tuesday, April 3, 2012

இலவச ஆடு, மாடு வளர்ப்போருக்கு பரிசு :தமிழ் புத்தாண்டுக்கு வழங்க உத்தரவு

அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு, பரிசு வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்டத்துக்கு, 25 பேருக்கு, வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, பரிசு வழங்கப்படும்.

இலவச ஆடு மாடுகளை, நன்றாக பராமரிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், எதிர்பாரா செலவு நிதியைக் கொண்டு, பரிசுத் தொகைகள் வழங்கலாம் என, கால்நடைத் துறை இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.மேலும், கறவை மாடுகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு, மாவட்டத்துக்கு, 10 பரிசுகளும்; ஆடுகளை பராமரித்தவர்களுக்கு, மாவட்டத்துக்கு, 15 பரிசுகளும் வழங்கலாம் எனவும் கூறியிருந்தார். இதை ஏற்று, பரிசுகளை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* பரிசுகள், ரொக்கமாக வழங்கப்படாது. மாடுகளுக்கான பரிசுகள், ஆவின் மூலம், தினமும் தீவனமாக வினியோகிக்கப்படும். இதற்கான தொகை ஆவினுக்கு செலுத்தப்படும்.
* ஆடுகளுக்கான தொகை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்துக்கு செலுத்தப்படும். அதன் மூலம், தினமும் தீவனமாக, அந்தந்த கால்நடை உதவி மருத்துவர் மூலம் வழங்கப்படும்.
* பரிசுக்குரியவர்களை தேர்வு செய்வதில், பாரபட்சம் காட்டுவதை தவிர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும், பொதுவான தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. இந்த முறை பற்றி, கால்நடைத் துறை இயக்குனர் விவரிப்பார்.
* கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் கொண்ட குழு, சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்யும். இக்குழுவுடன், ஆடுகளை வாங்கித் தரும் பணியில் ஈடுபட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், ஆடுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுவர்.
* பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்குவது தவிர, கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டத்துக்கு ஐந்து உதவி மருத்துவர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது; இவர்களை தேர்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றவர்களது பட்டியலுக்கு, மாவட்ட கலெக்டர், ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மாதம் 13ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு அன்று, பரிசுகளை வழங்க முயற்சிக்க வேண்டும் என, அரசு உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கறவை மாடுகள் - மாவட்டத்துக்கும் 10 பரிசு
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.4,000
மூன்றாம் பரிசு ரூ.3,000
ஆறுதல் பரிசுகள் (ஏழு பேருக்கு) தலா ரூ.1,000

ஆடுகள் - மாவட்டத்துக்கு 15 பரிசு
முதல் பரிசு ரூ.3,000
இரண்டாம் பரிசு ரூ.2,500
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஆறுதல் பரிசுகள் (12 பேருக்கு) தலா ரூ.1,000

No comments: