Monday, May 14, 2012

மதுரை ஆதீன மடத்தில் நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 7 பேர் சிறையில் அடைப்பு

மதுரை 293-வது ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன், காங்கிரஸ் முன் னாள் பொதுச்செயலாளர் நெல்லைக்கண்ணன் உள்ளிட்ட பிரமுகர்கள் தலைமையில் மதுரை ஆதீன மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.




இந்த குழுவினர் நேற்று மதுரை ஆதீன மடத்திற்குள் நழைந்து பூஜை செய்யப்போவதாகவும், வடக்கு மாசிவீதி-மேலமாசிவீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர்.



இதையடுத்து மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆதீன மடம் உள்ள தெற்கு ஆவணி மூல வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆதீன மடத்தின் கதவுகள் மூடப்பட்டன. பூஜைக்காக வந்த பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



இதனிடையே மதுரை வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் ஆதீன மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருஞானசம்பந்தரின் தேவாரம் புத்தகங்களை அவர்கள் எடுத்து வந்தனர்.



நித்யானந்தாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய மீட்புக்குழுவினர் மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை உடனடியாக வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதீன மடம் நோக்கி புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் முன்னேறி சென்றனர்.



உடனே ஆதீன மீட்புக்குழுவை சேர்ந்த நெல்லைக்கண்ணன், திருமாறன், முருகன் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 7 பேர் ஆதீன மடத்திற்கு முன்பு திடீரென வந்து நுழைய முயன்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்தனர்.



போலீசாருக்கும், இந்து மக்கள் கட்சி பிரமுகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆதீன மடம் முன்பகுதியில் ரோட்டில் அமர்ந்து அவர்கள் போராட்டம் செய்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த செந்தில் குமார், சர்வேஸ்வரன், மகேஸ்வரன், ரமேஷ், மதுரை வீரன், செல்வக்குமார், இளங்கோவன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நெல்லைக்கண்ணன், அர்ஜூன் சம்பத் உள்பட 45 பேரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.



மதுரை ஆதீன மடத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: