Monday, May 21, 2012

வெறும் மதிப்பெண்களா... விலைமதிப்பில்லா உயிரா : சோர்ந்து போகாதீர் பெற்றோரே... மாணவர்களே!

மதுரை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்தால் இரட்டிப்பு சந்தோஷம். மதிப்பெண் குறைந்து விட்டது அல்லது எதிர்பாராதவிதமாக தோல்வி ஏற்பட்டு விட்டது என்றால் மனம் தளரக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது.
தோல்வியே வெற்றிக்கான முதல் படிக்கல் என்று தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும். இதனை பெற்றோரும், மாணவர்களும் புரிந்து கொள்வது அவசியம்.அன்னை வயிற்றில் இருந்து, அழுது கொண்டே வெளியில் வந்தால் தான், பிள்ளை இப்பூமியில் வாழும். மூச்சுக்காற்றுக்கு ஏங்கி அழுகை எனும் தோல்வியை வெளிப்படுத்தும் போது தான், சுவாசம் சீராகிறது. வாழ்வு சுகமாக தொடர்கிறது. பெற்றோராகிய நாம், பிள்ளையின் அழுகையை ஆனந்தக் கண்ணீரோடு, அரவணைத்து ஏற்றுக் கொள்கிறோம். இந்த அரவணைப்பு, காலம் முழுதும் தொடரவேண்டாமா? கீழே விழுந்தால் மனம் பதறி, பிள்ளைக்கு அடிபட்டிருக்கிறதா என்று தானே பதறுகிறோம். பிளஸ் 2 தேர்வில் தோற்றாலும், மதிப்பெண் குறைந்தாலும் கீழே விழுவது போல் தானே. விழுந்த பிள்ளையை தூக்கி, ஆறுதல் படுத்த வேண்டாமா? பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை, ஆறுதல் கூறி தேற்றுங்கள். மாணவச் செல்வங்களே... உங்களை விட, உலகத்தில் உயர்ந்த செல்வம், பெற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள்."தோல்வியினால் துவண்டு நிற்கும் பிள்ளையிடம், அன்பு, அரவணைப்பு, ஆறுதல் தரவேண்டியது, பெற்றோரின் கடமை' என்கிறார், மனநல டாக்டர் சி. ராமசுப்ரமணியன்:தேர்வில் எதிர்பார்த்தது நடக்காவிட்டால், மாணவனுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் தோல்வி, அவமானம், மனச்சோர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் ஏற்படும். இதைக் கடந்து வரவேண்டியது தான் முதலில் செய்ய வேண்டிய வேலை. பிள்ளையின் மீது வைத்த நம்பிக்கை தளர்ந்து போய், பெற்றோரின் சுயகவுரவம் பாதிக்கப்பட்டதாக நினைக்கலாம். ஆனால் அதைப் பிள்ளையிடம் காண்பிப்பது ஆபத்தானது. பாரம் தாங்காமல் வண்டிமாடு கீழே விழுந்தால், அதற்கு தண்ணீர் காண்பித்து தட்டி கொடுப்பது தான் சரியான அணுகுமுறை. விலங்குகளுக்கே ஆதரவு தேவைப்படும் போது, நமது ரத்தபந்தமாம் பிள்ளைக்கும் தேவைப்படும், என்பதை உணருங்கள். நண்பர்களைப் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும் பிள்ளையை, வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். உள்மனக் காயம் ஆறும் வரை, ஆறுதல் கூறுங்கள். இப்போதைக்கு உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை, அன்பான பேச்சு, ஆறுதலான அரவணைப்பு தான். எதனால் மதிப்பெண் போயிற்று என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.பிள்ளையை உணரவைத்து, அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயார்படுத்த வேண்டும். தடுக்கி விழுவது தவறல்ல. விழுந்தவனை கரம் நீட்டி, தூக்கி விடுவது தான், பண்பு. ஒரே ஒரு தோல்வி, மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்காது. சாதனையாளர்களும், வெற்றியாளர்களும் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வதில்லை. தோல்விக்குப் பின் வெற்றி நிச்சயம் என்பதை, பிள்ளையை உணரவையுங்கள்.பையனின் திறமையை புரிந்து கொண்டு, ஆற்றலை அறிந்து, அதற்கேற்ப உங்கள் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டால், ஏமாற்றம் ஏற்படாது. உங்களது ஆசையை, பிள்ளையிடம் திணிப்பது நியாயம் அல்ல. பக்கத்து வீட்டு பையன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று, உங்கள் பிள்ளை சுமாரான மதிப்பெண் பெற்றாலும், தயவுசெய்து ஒப்பிட்டு பேசாதீர்கள். இது ஒட்டுமொத்த தன்னம்பிக்கையை சாகடித்துவிடும். நல்ல மதிப்பெண் பெறாத பிள்ளை, நல்ல மனிதனாக இருக்கலாம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமுள்ளவனாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கலையில் திறமையாளனாக இருக்கலாம். அதைக் கண்டறிந்து, அந்த திசையை நோக்கி, பிள்ளையை உருவாக்குங்கள். இவ்வாறு கூறினார்.No comments: