Wednesday, May 2, 2012

வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சிவாஜி படங்களை, இளைஞர்களுக்கு போட்டு காட்ட வேண்டும்: கர்ணன் பட வெற்றி விழாவில் இளங்கோவன் பேச்சு

சிவாஜி கணேசன் நடித்து வெற்றிகரமாக ஓடிய கர்ணன் திரைப்படம், தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் 50-வது நாள் விழா மதுரையில் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை சிவாஜி மன்றம் மற்றும் சூர்யா மூவிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.




விழாவில் முன்னாள் மத்திய மந்திரி இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திரைப்பட இயக்குனர் சேரன், மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவதி, கதிரவன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



குத்துவிளக்கேற்றி வைத்து விழாவில் இளங்கோவன் பேசும் போது கூறியதாவது:-



இந்த விழாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு 20, 30 வயது இளைஞர்கள் எல்லாம் அதிகளவில் கலந்து கொண்டு உள்ளனர். இதன் மூலமே சிவாஜியின் புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும் என்பதற்கு உதாரணம்.



இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லாம், சிவாஜியால் ஏதாவது ஒரு வகையில் பயன் அடைந்து இருப்பார்கள். ஆனால் இங்குள்ள ரசிகர்கள் அவர் படத்தை பார்த்தது மூலம் மட்டுமே பயன் பெற்று இருப்பார்கள். சிவாஜி கணேசனின் புகழுக்கு இந்த ரசிகர்கள்தான் காரணம்.



கர்ணன் படத்தை இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு இணையாக மாற்றி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்றைய இளைஞர்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்தது குறித்தும், அதற்காக தியாகிகள் தங்களது உயிரை விட்டதும், சிறைக்கு சென்றதும் பற்றி தெரியாது. நாட்டின் சரித்திரம் அவர்களுக்கு தெரியாது. எனவே நாம் அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சிவாஜியின் படங்களை போட்டு காட்ட வேண்டும்.



இன்றைய திரைப்படங்களில் காதல்கூட வன்முறையாக காட்டப்படுகிறது. ஆனால் சிவாஜி படங்களில் காதல் மென்மையானதாக இருக்கும். ஒரு தலைபட்சமாக காதலித்து திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதனை இருவர் உள்ளம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். குடும்ப பாசத்திற்கும் சிவாஜி முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்.



இவ்வாறு அவர் பேசினார்.



விழாவில் இயக்குனர் சேரன் பேசும்போது, புரட்சிகரமான படங்களில் சிவாஜி அதிகளவில் நடித்திருந்தாலும், அவர் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனது, தமிழக மக்களின் துரதிர்ஷ்டமாகும். சிவாஜியின் மணி மண்டபம் கட்டும் பணியை நாமே மேற்கொள்ளவேண்டும். அதனை பல்கலைக்கழகமாகவும் மாற்ற வேண்டும். இதற்கான நிதியை நாமே திரட்ட வேண்டும் என்றார்.

No comments: