Saturday, July 6, 2013

பெட்ரோல் குண்டுவீச்சு: 10 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை ரத்து

மதுரை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.




ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் 2012 அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற தேவர் குருபூஜையில் பங்கேற்று, திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் வேன் மீது மதுரையை அடுத்த சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த வேனில் 20 பேர் வந்து கொண்டிருந்தனர். இதில் 7 பேர் இறந்தனர். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.



இதுதொடர்பாக அவனியாபுரம் போலீஸார் சிந்தாமணி மற்றும் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பலரை கைது செய்தனர். இவர்களில் சின்ன அனுப்பானடி ராமர், மோகன், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன், அனுப்பானடியைச் சேர்ந்த விக்னேஷ், சோணையா, சந்திரசேகர், நாகராஜ், முத்துக்கருப்பன், பொட்டப்பாளையம் முத்துவிஜி ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு செப்.9 ஆம் தேதி பரமக்குடியில் நிகழ்ந்த சம்பவத்துக்காக, சதித் திட்டம் தீட்டியதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதில் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யக் கோரி பொதுத் துறைச் செயலரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டார்.



இந்த வழக்கில் கைதான பலரும் ஜாமீனில் வந்துவிட்டனர். ஆகவே, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



பின்னர், அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், 10 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.

.

No comments: