Saturday, February 8, 2014

பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவானால் ஆதரித்து பிரசாரம் செய்வோம்: சீமான் பேட்டி


கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாருக்கு நினைவு பொதுகூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் தொழிலை செய்தால் கேவலம் என்ற நிலையை மாற்றி இளைஞர்களும் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். மண்ணை நேசிக்கும் இளைஞர்களுக்குதான் திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் அறிவுசெல்வன், ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட மகளிர் பாசறை குமுதவல்லி, வக்கீல் ஜெயராஜ், கோபி களஞ்சியம், பொதிகை சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். ஆனால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைய போகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதில்லை. அரசியலில் ஜாதி, மதம் இருக்கக்கூடாது. அதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஆட்சிக்கு வரக்கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவானால் அதை வரவேற்று பிரசாரம் செய்வோம். எரிவாயு குழாய்களை கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். கேரளாவை போல் நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். இலங்கை கடற்படையினரால் இதுவரை 240 தமிழக மீனவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்தும் இருக்கிறார்கள். இதற்கு இருநாட்டு மீனவர்களும் பேச்சு வார்த்தை மூலம் சமூக தீர்வு என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தும் ஊழலை எதிர்ப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அந்த கட்சிகளுக்குள் பல பிரச்சினைகள் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: