Friday, February 7, 2014

தமிழர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம்: சீமான்

தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகமாக இருந்து வருகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவரும் 3 வழக்குரைஞர்களை வியாழக்கிழமை சந்தித்து பேசிய பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநில மொழிகளே உயர் நீதிமன்ற மொழிகளாக உள்ளன. ஆனால், தமிழ்மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் அமல்படுத்துவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இதை தமிழர்கள் உணர வேண்டும். தமிழர்கள் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் மத்திய அரசு பாராமுகமாகவே இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சதாசிவம் ஓய்வு பெறுவதற்குள் தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெற்றாக வேண்டும். மத்திய அரசு நினைத்தால் உடனே இதற்கு தீர்வு காண முடியும். இந்தி திணிப்பு போராட்டத்தில் தமிழர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆனால், தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

No comments: