Tuesday, February 4, 2014

கடையநல்லூரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கைது: கண்டனம் தெரிவித்து வருகிற 6–ந்தேதி போராட்டம்

கடையநல்லூர் மாவடிக்கால் மந்தை திடலில் இந்து முன்னணி கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த 31–ந்தேதி நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில கொள்கை பரப்பு செயலாளரான சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த இளங்கவி அரசன் என்கிற ராஜேந்திரன் என்பவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் முஸ்லீம்களுக்கு எதிராகவும், மோதலை தூண்டும் விதமாகவும் பேசியதாக கூறி அவரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகி இளங்கவி அரசன் மீது தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் பைசூல் புகார் மனு அளித்தார். அதன்பேரில் இளங்கவி அரசன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் கடையநல்லூரில் கடந்த 31–ந்தேதி நடந்த கொடியேற்று விழாவுக்கு தலைமை தாங்கிய இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவாவை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை இந்து முன்னணியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் 6–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கடைய நல்லூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட தலைவர் சிவா அனுமதி கேட்டார். அப்போது இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சிவாவை கொன்றுவிடுவோம் என்று சிலர் கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அதுதொடர்பாக போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 31–ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக, நிகழ்ச்சி நடந்து முடிந்த 2 நாட்கள் கழித்து போலீஸ் அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இளங்கவி அரசன் என்கிற ராஜேந்திரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்பில்லாத மாவட்ட தலைவர் சிவாவை போலீசார் நேற்று கைது செய்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, சிறுபான்மையினரின் ஓட்டை பெறுவதற்காக, இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே சிவாவை போலீசார் கைது செய்துள்ளதாக கருதுகிறோம். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சிவா கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக வருகிற 6–ந்தேதி புளியங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: