Monday, January 7, 2013

டீசல் விலை ரூ.3 உயர்கிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மத்திய பொது பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) தாக்கல் செய்யப்படும் போது மானிய சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தெரிய வரும்.

இந்த நிலையில் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்தப்படி உள்ளது. தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூ. 10க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.411 கோடி இழப்பை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கின்றன. இந்த இழப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

அதன்படி டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையை கொடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதையடுத்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை உயர்த்தப்படும் போது, பெட்ரோல் விலையும் சற்று உயரும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அப்போதைய சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இருப்பதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயமாகும் என்று நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: