Monday, January 7, 2013

திரைப்படத்துறை உள்ள வரை சிவாஜி என்ற இமயத்தின் நினைவு அழியாமல் இருக்கும்: திருச்சி சிவா பேச்சு

திரைப்படத்துறை உள்ள வரை சிவாஜி என்ற இமயத்தின் நினைவு அழியாமல் இருக்கும் என்று பராசக்தி திரைப்பட வைர விழாவில் திருச்சி சிவா எம்.பி. பேசினார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி. கடந்த 1952-ம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தின் வைர விழா மதுரை மாநகர் மாவட்ட சிவாஜி சமூக நலப்பேரவையின் சார்பில் நடந்தது. 

விழாவிற்கு பேரவையின் மாநிலத்தலைவர் கே.சந்திர சேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் கலந்து கொண்டு திருச்சி சிவா எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகு நடக்கும் இந்த விழாவில் கூடியிருக்கும் அவரது ரசிகர்களை பார்க்கும் போது அவர் ஒரு சகாப்தம் என்பது புரிகிறது. நவராத்திரி, தெய்வமகன் படங்களை இப்போது பார்த்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எப்படி அவர் இத்தனை வேறுபாடுகளை காட்டினார் என்று ஆச்சரியப்படுவோம். 

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரை பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களாகவே வாழ்ந்து காட்டினார். 

சிவாஜி கணேசன் ஒரு கட்சியை சார்ந்து இருந்தாலும், தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக குடிகொண்டிருப்பவர்.பிரான்ஸ் நாட்டு அரசு அவரை பாராட்டி செவாலியே என்று பட்டம் வழங்கியது. 

ஆனால் நமது நாடு இன்னும் யோசிக்கிறது. சிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். அதனை தொடர்ந்து வலியுறுத்துவேன். 

மதுரை வந்தவுடன் மத்திய மந்திரி மு.க.அழகிரியை சந்தித்து பேசினேன். இந்த விழாவில் கலந்து கொள்வதாக கூறியபோது, அவரை அழைக்கவில்லையே என்று வருந்தினார். உங்கள் சார்பாக நான் செல்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். 

ஒரு திரைப்பட கலைஞனுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் கண்ணீர் சிந்தியது அவரது மறைவின் போதுதான். திரைப்படத் துறை உள்ளவரை, தமிழர்களின் மனதில் அந்த இமயத்தின் நினைவு அழியாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அழகர், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், மாநகர் மாவட்ட தலைவர் ஜி. ராஜேந்திரன், வக்கீல் ஆர். வெங்கடேசன் மற்றும் சிவாஜி சமூக நலப் பேர வையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். 

முடிவில் ராஜூ நன்றி கூறினார். 

விழா தொடங்கியதும் பராசக்தி உள்பட சிவாஜியின் நடிப்பில் வெளியான பல்வேறு படங்களில் இருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. சிவாஜி சமூகநலப் பேரவையிலிருந்து மறைந்த சுபாஷ் என்பவரின் மனைவிக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியும், ஏழைப் பெண்களுக்கு இலவச உடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் திருச்சி சிவா எம்.பி. வழங்கினார். 

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவாஜி செல்வம், பச்சைமணி, நாராயணன், ஜவகர்லால், செந்தூரான் மற்றும் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments: