Monday, January 7, 2013

பெட்ரோல் குண்டு வீச்சில் 7 பேர் பலி: 100 பக்க குற்றப்பத்திரிகை தயார் - இன்னும் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல்

மதுரையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 7 பேர் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய மதுரை புளியங்குளம் பகுதியை சேர்ந்த 20 பேர் காரில் சிந்தாமணி அருகே வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது.

இதில் கார் தீ பிடித்து எரிந்தது. காரில் பயணம் செய்த 20 பேர் உடல் கருகினர். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் தமிழக அரசு வழங்கியது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமர், மணிகண்டன், கார்த்திக், அஜித், விஜி, பால முருகன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ராமர் உள்ளிட்ட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 100 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 20 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெட்ரோல் குண்டுகள் மற்றும் பொருட்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் போலீசிடம் கொடுத்துள்ள வாக்கு மூலங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை இன்னும் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

No comments: