Monday, January 21, 2013

எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் விலை நிர்ணய உரிமையை வழங்கியது மக்கள் விரோத நடவடிக்கை: சீமான் அறிக்கை


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு தக்கவாறு உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அதன் மூலம் ஒவ்வொரு வாரமும் பெட்ரோல் விலை உயர வழிவகுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இப்போது டீசல் விலை நிர்ணய உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.
 
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவின் காரணமாக, டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது மாதா மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை விலைகளை உயர்த்தும் வசதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இது அறிவிக்கப்பட்ட விலையேற்றம் ஆகும்.
 
ஆனால் எந்த விதமான பொது அறிவிப்பையும் வெளியிடாமல், மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.46 ஏற்றி, அதனை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சுமையேற்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, முற்போக்கு கூட்டணி அரசா அல்லது நாட்டு மக்களை வாட்டும் பிற்போக்கு கூட்டணி அரசா என்பதை மக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
 
மத்திய அரசின் நிதி நிலையை ஒழுங்குபடுத்த விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தில் இருந்து டீசல், பெட்ரோல் பொருட்களுக்கு அளிக்கும் மானியம் வரை மத்திய அரசு குறைத்து வருகிறது. ஆனால், பெரும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு அளிக்கும் வரி சலுகைகள் மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
 
இதனால் ஏற்படும் நிதிச்சுமை பற்றி மத்திய அரசு ஒருபோதும் பேசியதில்லை. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் விலையேற்றத்திற்கு வழி செய்வதே பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன்சிங் அரசின் தொடர் சாதனையாக இருக்கிறது. இந்த அரசு தூக்கியெறியப்படாமல், இந்த நாட்டு மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது.

No comments: