Saturday, February 18, 2012

தமிழகம்: ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் தவணையாக நாளை, 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் அமைக்‍கப்பட்டுள்ள 40,000-க்கும் மேற்பட்ட முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்‍கப்படுகிறது.

பயணம் செய்வோருக்கு வசதியாக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 838 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கைவாழ் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 5.5 லட்சம் குழந்தைகளுக்‍கு, போலியோ சொட்டு மருந்து வழங்க ஆயிரத்து 126 மையங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு நாளை சொட்டு மருந்து அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 2-வது தவணையாக வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

No comments: