Monday, February 6, 2012

ராமநாதபுரத்தில் மன்னர் பாஸ்கர சேதுபதி சிலை

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்ல நிதியுதவி செய்த மாமன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலையை ராமநாதபுரம் நகரில் நிறுவ வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தும் தீர்மானம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கூட்டம், ராமநாதபுரம் பாரதி நகர் கலைவாணி மெட்ரிக்குலேசன் பள்ளியில், அமைப்பின் மாவட்ட செயலாளர் ந.சேகரன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல் சலாம், மூத்த வழக்குரைஞர் எம்.ராமசாமி, அமைப்பின் மானாமதுரை கிளை செயலாளர் பெ.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கியப் பெருமன்ற முன்னாள் தலைவர் ஐ.கதிரேசன் வரவேற்றார்.

அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினரும், எழுத்தாளருமான சந்திரகாந்தன் பாரதி, ஜீவா பார்வையில் சுவாமி விவேகானந்தர் என்ற தலைப்பில் பேசினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று உலக சமய மாநாட்டில் பங்கேற்க நிதியுதவி செய்த மாமன்னர் பாஸ்கர சேதுபதிக்கு ராமநாதபுரம் நகரின் மையப் பகுதியில் சிலை அமைக்க தமிழக அரசை வலியுறுத்துதல், மாவட்டத்தில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோருதல், பள்ளி,கல்லூரிகளில் நூலகங்கள் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்டடன.

கூட்டத்தில் கலைவாணி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெகதீசன், அமைப்பின் எமனேசுவரம் கிளை செயலாளர் எல்.எஸ்.ரெங்காச்சாரி, ஆசிரியர் சௌந்தரபாண்டியன், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் குழ.விவேகானந்தன், பொருளாளர் எம்.சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் பொருளாளர் ஆர்.டி.ரகுநாதன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் ஜோசப், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் ராக்லாண்ட் மதுரம், என்.ஏ.காதர், கார்த்திக்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் முகவை சந்துரு நன்றி கூறினார்.

No comments: