Saturday, February 18, 2012

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டை குறைக்க நடவடிக்கை: சென்னையில் மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு

தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது. புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தொடங்காததும், ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களை சீராக முறைப்படி பராமரிக்காததும், நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மின் வாரியம், பணம் செலவழித்து மற்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவு மின்சாரத்தை வாங்க இயலாமல் இருப்பதும் தான் மின் தட்டுப்பாட்டுக்கு முக்கியகாரணமாகும்.

இந்த குறைகளை தீர்த்து 2013-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டை மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முதல்- அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் உள்ள 8 மணி நேர மின்வெட்டு மக்களிடம் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற் சாலைகளிலும் திட்ட மிட்டப்படி உற்பத்தியை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து உயர்அதிகாரிகளை நேற்று அழைத்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்தனர்.

இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.

சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.

இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.

சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறையும். இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

இதற்கிடையே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் சுமார் 7 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கினால், நிதிநிலைமை மேலும் மோசம் அடையலாம் என்று கருதப்படுகிறது.

வெளிச்சதையில் ஒரு யூனிட் மின்சாரம் நேரத்துக்கு தகுந்தபடி ரூ.6 முதல் ரூ.16 வரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் மின்சாரம் மக்கள் நலன் கருதி, யூனிட் ஒன்றுக்கு 80 பைசாவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

இந்த சிக்கலையும் மீறி வெளிச்சந்தைகளில் மின்சாரம் வாங்குவது பற்றி தமிழக அரசு இன்று முடிவு எடுக்க உள்ளது. வெளிச்சந் தைகளில் கூடுதல் மின்சாரம் வாங்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு கால அளவை மேலும் குறைக்க முடியும். மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்களிடமும் மின்சாரம் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி மின்சாரம் வாங்கினால் 400 மெகாவாட் மின்சாரம் தினமும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தினமும் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை வைத்து சமாளித்து விட்டால், வரும் மே மாதம் முதல் காற்றாலை மூலம் ஓரளவு மின்சாரம் கிடைக்க தொடங்கி விடும்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தினமும் 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து கோடையில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டால், அதற்கு ஏற்ப, தங்கள் அன்றாட பணிகளை செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் அனைத்து தரப்பினருக்கும் வேறுபாடியின்றி மின்வெட்டை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வரும் என்று மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: