Saturday, February 18, 2012

பிரேசில் நாட்டில் குளு குளு வசதியுடன் தயாராகும் மெட்ரோ ரெயில் பெட்டிகள்: இந்த ஆண்டு இறுதியில் சென்னை வந்து சேரும்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதுபோல சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளன. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக பல்வேறு கம்பெனிகளுக்கு 22 டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. சுரங்கப் பாதை அமைப்பதற்காக சீனாவில் இருந்து கப்பல் மூலம் 4 ராட்சத `டனல் போரிங் மிஷின்கள்' வந்துள்ளன.

முதலில், வண்ணாரப்பேட்டையில் இருந்தும், செனாய் நகரில் இருந்தும் சுரங்கப் பாதை அமைக்கும் பணி இன்னும் 2 மாதங்களில் தொடங்கும் என்றும், அதற்குள் மேலும் 7 டனல் போரிங் மிஷின்கள் சீனாவில் இருந்து கப்பலில் வந்து சேர்ந்து விடும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே, கோயம்பேட்டில் 68 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளுடன் நிர்வாக அலுவலகம், ஒட்டுமொத்த மெட்ரோ ரெயில்களை இயக்கக்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரெயிலை நிறுத்துவதற்கான இடமும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் இங்கே பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.

இதற்கான பணியில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்காக குளு குளு வசதிகளுடன்கூடிய ரெயில் பெட்டிகளை வடிவமைத்து, தயாரித்து, சோதனை செய்து, இயக்கித் தருவதுடன், அந்தப் பெட்டிகளை இயக்குவது பற்றி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைக்கான டெண்டர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த `அல்ஸ்டம் டிரான்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்திற்காக 42 `செட்' ரெயில் பெட்டிகளை தயாரித்து கொடுக்க உள்ளது. ஒரு `செட்' ரெயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஆக மொத்தம் 168 பெட்டிகளை தயாரித்துக் கொடுப்பதற்கு ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது மெட்ரோ ரெயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக அடுத்த ஆண்டு இறுதியில், கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் பெட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் இருந்தே சென்னைக்கு வரத் தொடங்கிவிடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments: