Sunday, March 2, 2014

நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் கவுன்சிலர் சிக்கினார் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நேற்று பொதுக்கூட்டம் நடத்த தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை காங்கிரசார் அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த ரகளை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 4–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள ஆற்றூர் பேரூராட்சி கவுன்சிலரும், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ், செறுகோல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கனகராஜ் உள்பட 5 பேரை திருவட்டார் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். மற்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார் தாங்களும் ஆற்றூரில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் அவர்கள் அனுமதி கேட்டனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி வாங்கி விட்டதால் உங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டபடி நேற்று மாலை பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்தும் அந்த பகுதியை கலகலப்பாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் திரண்டனர். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியும், அந்த கட்சி கொடிகளை எரித்த வண்ணமும் ஊர்வலமாக வந்தனர். மேடை அருகே வந்ததும் காங்கிரசார் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கினர். அங்கு கட்டப்பட்டு இருந்த கொடி, தோரணங்களை அறுத்து தீவைத்து எரித்தனர். மின் விளக்குகள் மற்றும் இருக்கைகளையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். குறைவான எண்ணிக்கையிலேயே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததால் அவர்களால் காங்கிரசாரை கட்டுப்படுத்த முடியவில்லை. மோதலில் காயம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காங்கிரசார் நடத்திய தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் திருவட்டார் ஒன்றிய தலைவர் ஜான்சன் சேவியர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், கெட்டவார்த்தை பேசுதல், கொடி எரிப்பு உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதட்டமான சூழல் நிலவுவதால் ஆற்றூர் மற்றும் முளகுமூடு சந்திப்பில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பாக காங்கிரசாரும், நாம் தமிழர் கட்சியினரும் கடந்த சில தினங்களாக சென்னையில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜீவ் காந்தி சிலை உடைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு என மோதல் தொடர்ந்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: