Monday, March 31, 2014

நடிகர் கார்த்திக்குடன் ஞானதேசிகன் சந்திப்பு


அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவராக நடிகர் கார்த்திக் இருந்து வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் கார்த்திக் கட்சிக்கு விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதில் விருதுநகர் தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்து நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நடிகர் கார்த்திக் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால் சற்று காலம் கட்சி பணிகளில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட நடிகர் கார்த்திக் முடிவு செய்தார். அதன்படி, கடந்த வாரம் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது திருநெல்வேலி, தேனி ஆகிய தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று நடிகர் கார்த்திக் கேட்டுக்கொண்டார். ஆனால் மதுரை தொகுதியை மட்டும் தர முடியும் என்று அங்கு உள்ள தலைவர்கள் தெரிவித்து விட்டனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் வீட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்பி.எஸ்.ஞானதேசிகன் சென்றார். சுமார் 30 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நடிகர் கார்த்திக்கிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘38 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டனர்’ இன்னும் தென்சென்னை தொகுதி மட்டுமே பாக்கி இருக்கிறது’. எனவே அந்த தொகுதியை வேண்டுமானால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஞானதேசிகன் கார்த்திக்கிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் நடிகர் கார்த்திக்கோ கட்சி மேலிடம் தெரிவித்தபடி, தனக்கு மதுரை தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் ‘39 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தான் பிரசாரம் செய்வதாகவும்’ நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பி.எஸ்.ஞானதேசிகன் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறி சென்றார்.

No comments: