Saturday, March 8, 2014

தேனியில் 'சிக்குன் குனியா': முடங்கிய கிராமத்தினர்


ஆண்டிபட்டி அருகே கிராமங்களில், சிக்குன் குனியா பரவி வருவதால், கிராம மக்கள் முடங்கியுள்ளனர். தேனி மாவட்டம், திருமலாபுரம் ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி, வில்லானிபுரம், காமாட்சிதேவன்பட்டி கிராமங்களில் சிக்குன் குனியா பரவி வருகிறது. வைகை அணையின் நீர்த் தேக்கப்பகுதியின் கரையில் உள்ள இக்கிராமங்களில், விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. சில நாட்களாக, இங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றாலும் கை,கால் வலி, சோர்வு குறையவில்லை. இது போன்ற பாதிப்பு, முன் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீரணத்தேவர்,60: கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. மூன்று வாரங்களாக எனக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் சரியாகவில்லை. ஊராட்சியில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில்லை. மொக்கத்தாய்,42: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இருந்தும், அங்கு ஊசி போடுவதில்லை. மருந்து மாத்திரை மட்டுமே தருவதால், ஊசி போட 7 கி.மீ.,தூரம் உள்ள எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டியுள்ளது. சிகிச்சை பெற்றாலும் கை,கால், மூட்டு வலி குறையவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. பெருமாயி,45: ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சல் உள்ளது. பெரியகுளத்தில் தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். ரத்தம், நீர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறேன். இன்னும் குணமாகவில்லை. எந்த வேலையும் செய்யாமல் முடங்கி கிடக்கிறேன். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருமாள்கோவில்பட்டி, வில்லானிபுரம், காமாட்சிதேவன்பட்டி கிராமங்களில், 20 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் சிக்குன் குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறுதி கட்ட சோதனைகளுக்குப் பிறகே சிக்குன்குனியா பாதிப்பு குறித்து, சொல்ல முடியும். சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றனர்.

No comments: