Tuesday, March 18, 2014

மாயமான மலேசிய விமானம்: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானங்கள், கப்பல்கள் மற்றும் செயற்கை கோள்கள் உதவியுடன் அதை தேடும் பணி நடைபெறுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே விமான கட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக விமானி பேசிய பிறகு விமானம் காணாமல் போய் இருக்கிறது. அப்பகுதி பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதி என தெரியவந்துள்ளது. மேலும் ரேடாரில் தெரியாமல் இருப்பதற்காக சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் மட்டும் மிக தாழ்வாக பறக்க விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாயமான மலேசிய விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை ஒருபோதும் மறுக்க முடியாது என அமெரிக்காவின் உளவுத் துறை (சி.ஐ.ஏ) இயக்குனர் ஜான் பிரென்னான் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது இதை அவர் தெரிவித்தார். தாய்லாந்தை சேர்ந்த 2 பேரின் பாஸ்போர்ட்டுகள் திருட்டு போயின. அதை வைத்து 2 பேர் டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் இக்கடத்தல் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தாய்லாந்து போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்து மலேசிய சிறப்பு புலனாய்வு போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். இக்கருத்துகளின் அடிப்படையில் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் வடமேற்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் தற்போது ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகள் இணைந்துள்ளன. ஆஸ்திரேலியா, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் பயணிகள் விமானம் விழுந்தது. அப்போது அதை தேடும் பணி சவாலாக இருந்தது. ஆனால் அதில் இருந்த சிக்னல் கருவிகள் மூலம் விமானம் கடலில் கிடந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் மாயமான மலேசிய விமானத்தில் சிக்னல் வெளியேற்றும் கருவி மாயமாகி உள்ளது. அதனால் தான் அந்த விமானம் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் விபத்து கண்டுபிடிப்பு நிறுவன அதிகாரி ஜீன்பால் டிரோடக் தெரிவித்துள்ளார். கடைசியாக அந்த விமானம் கஜகஸ்தான் பகுதியில் பறந்ததாக தகவல் வெளியானது. இதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. அந்த விமானம் பறந்ததாக ரேடாரில் பதிவாகவில்லை என அறிவித்துள்ளது.

No comments: