Wednesday, April 17, 2013

மரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்தது: நடிகர் விவேக் ஆதங்கம்


மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, பசுமை கலாம் மற்றும் மேட்டுப்பாளையம் நகர ரத யாத்திரை விழாக்குழு ஆகியவை சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை மற்றும் மரம் நடும் விழாவை கோ-ஆப்ரேடிவ் காலனியில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பசுமை கலாம் அமைப்பு மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எனக்கு இட்ட பணி. எனக்கு இட்ட அன்புக்கட்டளை. தமிழகம் முழுவதும் பசுமை கலாம் அமைப்பு மூலம் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

10 லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்காக கடலூரில் விழா நடைபெற்ற போது விழாவில் பேசிய அப்துல் கலாம் மரக்கன்று நடும் பணி இதோடு நின்று விடக்கூடாது. இன்னும் தொடர வேண்டும் என்று கூறினார். பசுமை கலாம் அமைப்பு தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் இதுவரை 18 1/2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

18 1/2 லட்சம் மரக்கன்றுகள் நட அன்பு பெரியவர்கள், முகம் தெரியாத தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் தான் காரணம். எனது இலக்கு ஒரு கோடி என்பதை மனதில் எண்ணி அதனை செயல்படுத்தி ஈடுபட்டு வருகிறேன்.

மேட்டுப்பாளையம் நகரில் கம்பி வலையோடு பத்தாயிரம் மரக்கன்றுகள் நட சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி மாணவர்கள் மத்தியில் மரத்தை பற்றியும், மழையை பற்றியும் பேசி வந்தேன். தற்போது பொதுமக்கள் கூடுகிற இடங்களில், சாலைகளில் மரக்கன்றுகள் நட முயற்சிகளை மேற்கொண்டு உள்ளேன்.

மேட்டுப்பாளையம் நகரில் பொது இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட உள்ளோம். இதனை செயல்படுத்த நகரசபை தலைவர் சதீஸ்குமார், ஒருங்கிணைப்பாளர் சுதர்ஸன் ஆகியோர் முன் வந்துள்ளார்கள். பொது இடத்தில் மரம் நடுவது என்பது இது தான் முதல் முறை. அதுவும் மேட்டுப்பாளையம் நகரில் தான் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இன்று நாம் நடும் மரக்கன்றுகள் 5 ஆண்டுகளில் நிழல் தரும் மரங்களாக வளர்ந்து விடும். மாறி வரும் காலத்திற்கேற்பவும். வெயிலை தாங்கக்கூடிய வேம்பு, பூவனி, வாகை ஆகிய மரங்கன்றுகளை நட்டு வருகின்றோம்.

நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம் தான் காரணம். பூமித்தாயின் அழகிய முகம் கோரமாக ஏற்பட்டதற்கு காரணம் நாம் தான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் ஆற்று நீர், நிலத்தடி நீர் மாசு பட்டது. கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசுபட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் காற்று மாசுபட்டது. மரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மரமும் இயற்கையின் கரம். இப்போது நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் வெப்ப நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. விவசாய நிலங்கள் மறைந்து வருகிறது. விளைச்சல் குறைந்து வருகிறது. விவசாயி வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்ற சூழ்நிலை காணப்படுகிறது. இளைஞர்களே விவசா யத்திற்கு திரும்பி வாருங்கள். விவசாயத்தை மீட்டு எடுக்க முன் வாருங்கள்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.

No comments: