Saturday, April 19, 2014

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்: பி.டி.அரசகுமார் உறுதி


கடலாடி மற்றும் முதுகுளத்தூர் உள்ளடக்கிய ஒன்றிய கிராம பகுதிகளில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளரும், தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான பி.டி.அரசகுமார் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:– கள்ளர், மறவர், அகமுடையார் இன மக்களை ஒன்றாக தேவர் இனமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வேன். கடந்த 19 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இந்த முயற்சியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது வருந்தத்தக்கதாகும். மேலும் நான் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றாக அரவணைத்து செல்வேன். கடந்த 1996 முதல் 2006–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை அன்ன வாசல் ஒன்றியத்தில் உள்ள மறவந்தலை என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றி உள்ளேன். மேலும் நான் மக்களின் தேவையை நன்கு உணர்ந்தவன். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உலகமே தெரியும் வண்ணம் அவரது புகழினை உலகிற்கு பறை சாற்றுவேன். என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அரசின் திட்டங்களை இப்பகுதியில் நல்லமுறையில் கொண்டு வந்து மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். தொழிற்சாலைகளை இப்பகுதிக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்வேன். படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன். அனைத்து சமுதாய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவன். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது மறத் தமிழர் சேனை கட்சியை சேர்ந்த புதுமலர் பிரபாகரன், உமாமகேஸ்வரன், சங்கர், கார்த்திக்சேதுபதி, தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பூமித்தேவர், செல்வமேரி, இந்திரா, திலீப், மருது உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர். முன்னதாக ஏராளமான பெண்கள் குழவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.

No comments: