Monday, January 6, 2014

ஜன.16இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா ஜன.16ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, முனியாண்டி சுவாமி கோயில் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாக்குழு தலைவர் வெ.பாலாஜி தலைமை வகித்தார். ஜே.சுந்தர்ராஜன், வி.சுந்தரராகவன், டி.கணேசன், வி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் விழா குழுவினர் கூறியதாவது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் பதிவு ஜன.6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வருவாய் துறை அலுவலகத்தில் நடைபெறும். பதிவின்போது கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத் துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் பதிவிற்கான ஆவணங்களை அளிக்கவேண்டும். மேலும், 21 வயது முதல் 40 வயது நிரம்பிய மாடுபிடி வீரர்கள் மட்டும் உரிய சான்றிதழ்களுடன், தங்களது பெயர்களை வருவாய்த் துறை அலுவலகத்தில் ஜன. 10,11ஆம் தேதியில் பதிவு செய்யலாம். இந்த ஆண்டு டோக்கன் முறையில் வரிசை எண் 1 முதல் 50 வரையிலான காளைகள் அவிழ்த்துவிடப்படும். ஜல்லிக்கட்டு விழா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் விழா முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மோட்டார் சைக்கிள் தனித்தனியாக பரிசாக வழங்கப்படும். இது தவிர, ஜல்லிக்கட்டு காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், வாஷிங்மிஷின், குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், எல்சிடி டிவி, தஞ்சாவூர் தட்டுகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் விலங்குகள் நலவாரியம் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் என்றனர். .

No comments: