Sunday, January 26, 2014

கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது


தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது. தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தேனுமகள் பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 127 பேரின் பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. பத்ம விபூஷண்: முன்னாள் மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மஷேல்கர், பிரபல யோகாசன குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகிய இருவரும் பத்ம விபூஷண் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறைந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய விருதாக பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகியோருக்கும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், நீதிபதி தல்வீர் பண்டாரி, விஞ்ஞானி திருமலாச்சாரி ராமசாமி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகி பர்வீன் சுல்தானா, ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்பட மொத்தம் 24 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் டி. பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா, டாக்டர் அஜய் குமார் பாரிடா, டாக்டர் கோவிந்தன் சுந்தரராஜன், ராமஸ்வாமி ஆர்.ஐயர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், புற்றுநோய் மருத்துவ நிபுணர் ராஜேஷ் குரோவர், மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் சகோதரர் பிரதாப் கோவிந்தராவ், நடிகை வித்யா பாலன், நடிகர் பரேஷ் ராவல், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாடக நடிகர் பன்சி கௌல், சாரங்கி வாத்தியக் கலைஞர் உஸ்தாத் மொய்னுதீன் கான் உள்ளிட்ட 101 பேர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பெண்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 7 வெளிநாட்டவரும் அடங்குவர். பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் ஏற்கெனவே காலமாகி விட்டனர். மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி என்.ஏ.தபோல்கர் உள்ளிட்ட அந்த மூவருக்கும் மரணத்துக்குப் பின் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்குவார். பத்மபூஷண் விருது: தேசிய அளவில் ஆளுமை மிக்க அங்கீகாரம் எனக்கு கிடைத்துள்ள பத்மபூஷண் விருது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஒர் அங்கீகாரம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை இலக்கியப் பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும் உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன். இது இட்டுக் கொள்வதற்கான பட்டம் அல்ல. பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல. பயணப்பாதையில் இளைப்பாறிக் கொள்ளும் ஒரு பாலைவனச் சோலை. சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன். கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளைத் தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களையெல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்துச் சென்ற தமிழ்ச் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என வைரமுத்து தெரிவித்துள்ளார். வாழ்க்கை குறிப்பு: தேனி மாவட்டம், மெட்டூர் என்ற கிராமத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர். தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைக்கல்வி முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு அரசு ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது 1980-இல் பாரதிராஜாவின் "நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். "வைகறை மேகங்கள்' முதல் "மூன்றாம் உலகப்போர்' வரை 36 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார். 6 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வைரமுத்து. பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை பெற்றிருக்கிறார். 2003-இல் இலக்கியப் பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்' 2003-இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

No comments: