Wednesday, January 1, 2014

‘‘படைப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கும்’’ பணமும், சொத்துக்களும் நிலைக்காது -டைரக்டர் பாரதிராஜா பேச்சு

‘‘சினிமா கலைஞர்களுக்கு பணமும், சொத்துக்களும் நிலைப்பதில்லை. அவர்களின் படைப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கும்’’ என்று டைரக்டர் பாரதிராஜா பேசினார். பாரதிராஜா புதுமுகங்கள் நடித்துள்ள ‘அது வேற இது வேற’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– ‘‘இந்த படத்தின் இயக்குனர் திலகராஜன் நல்ல அறிவாளி. ஆனால், வறுமையில் வாடுகிறார் என்று எல்லோரும் பேசினார்கள். வறுமை, ஒருநாள் வளமையாக மாறும். அவருக்குதான் வறுமையே தவிர, அவரது அறிவுக்கு வறுமை கிடையாது. எம்.ஜி.ஆர். வீடு நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான். இன்று எனக்கு நான்கு கார்கள், பல வீடுகள் இருக்கிறது. எனக்குப்பின் நிலையாக இருப்பது நான் படைத்த படைப்புகளும், எனது சிந்தனைகளும் மட்டுமே. பணமும், சொத்துக்களும் நிலையானது அல்ல. எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று பழமையாகி கிடக்கிறது. ஆனால், அவரது படைப்புகளும், படங்களும் என்றுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமா கலைஞர்களின் சிந்தனைகள் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும்.’’ இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா பேசினார். கலந்துகொண்டவர்கள் விழாவில் டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், கமீலா நாசர், கே.எஸ்.சீனிவாசன், டைரக்டர்கள் பேரரசு, சித்ரா லட்சுமணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், நடிகர்கள் விவேக், நாசர், இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், தாஜ்நூர், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர் ஜி.ஜெயசீலன் வரவேற்று பேசினார். டைரக்டர் திலகராஜன் நன்றி கூறினார்.

No comments: