Monday, January 20, 2014

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்போட்டி

தமிழகத்தில் 39 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்றும், வேட்பாளர்கள் அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்டிணா சாமி, இணை ஒருங்கிணைப்பாளர் லெனின், பொருளாளர் கணேஷ் ஆனந்த் உள்பட தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை தமிழகத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இதுவரை ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் 5 லட்சம் பேரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல தொகுதிகளில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்? என்பது அடுத்த மாத இறுதியில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். கறுப்பு பணம் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவது பற்றி பேசிவருகிறார். கறுப்பு பணத்தை பொறுத்தவரை எப்படியும் இந்தியாவுக்கு கொண்டு வந்துவிட முடியும். ஆனால், ரிலையன்ஸ் போன்ற பெரிய கம்பெனிகள் தங்களது தனிப்பட்ட லாபத்திற்காக ஊழலில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை ஊழல் நிறைந்த கட்சிகள் ஆகும். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றன. அது களையப்பட வேண்டும். அதிருப்தியாளர்கள் நீக்கம் ஊழலை மையப்படுத்தியே வரும் பாராளுமன்ற தேர்தலை ஆம் ஆத்மி கட்சி சந்திக்க உள்ளது. கண்டிப்பாக கூட்டணி இருக்காது. தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலையிலும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தவறிவிட்டது. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்வதை தடுக்கவும் இந்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments: