Sunday, January 26, 2014

சிவாஜி சிலை விவகாரம்: அரசின் முடிவை எதிர்நோக்கும் சிவாஜி குடும்பத்தினர்


சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாக சிவாஜி மகன்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு எதிராக காமராஜர் சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்டது. ஆனால், இச்சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து சிலையை அகற்ற வேண்டும் என பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும, அப்பா மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும், இது சம்பந்தமாக எந்தவித போராட்டமோ, ஆர்பாட்டமோ தற்போது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறாம். இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: