Wednesday, January 22, 2014

டிக்கெட் விற்பனையில் போட்டி போட்டு சலுகைகளை அறிவிக்கும் விமான நிறுவனங்கள்

பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் மத்தியில் வரையிலான காலகட்டத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டி விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களில் பெரும் சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. டிக்கெட்டுகளின் விலையைப் பாதியாகக் குறைத்துள்ள சில நிறுவனங்கள் அவை இன்னும் இரண்டு நாட்களுக்குள் முன்பதிவு செய்யப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஒரு மாதம் கழித்துதான் இந்த டிக்கெட்டுகளுக்கான பயணங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், அதேபோல் ஏப்ரல் மத்திக்குள் இந்தப் பயணங்கள் நிறைவு செய்யப்படவேண்டும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறைந்த கட்டண விமானங்களே இத்தகைய சலுகைகளை முதலில் துவங்கின. இந்திய விமான நிறுவனமான ஏர்-இந்தியாவும் இவற்றைத் தொடர, ஜெட் நிறுவனமும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. நாளை இரவு வரை வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடியுடன் கூடுதல் எரிபொருள் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட்டின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இந்தியாவின் குறைந்த சேவை விமான நிறுவனமான இண்டிகோவும் இதற்கு இணையான சலுகைகளை அறிவித்துள்ளது. கோ ஏர் நிறுவனமும் இந்த சலுகைத் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டின் சலுகைகளை கணக்கிடும்போது இந்த ஆண்டு கொடுக்கப்படும் சிறிய அளவிலான தள்ளுபடிகளும், டிக்கெட் சலுகைகளும் அத்தனை கவர்ச்சிகரமானதாக இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்ற நாட்களில் சாதாரண மக்களால் எட்டமுடியாத விற்பனை விலைகளால் மந்தமான பயணக் காலங்களில் விமான நிறுவனங்களால் வழங்கப்படும் இத்தகைய தள்ளுபடிகள் மக்களைக் கவரவே செய்கின்றன. மேலும், இத்தகைய தள்ளுபடிகளால் கிடைக்கும் வருமானம் தங்களின் நஷ்டத்தை ஓரளவு ஈடுசெய்ய உதவுவதாக நிறுவனங்களும் கருதுகின்றன. ஆசிய பசிபிக் விமான அமைப்பின் கணக்கீடுகளின்படி இந்திய விமான நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் சுமார் 2 பில்லியன் டாலர் இழந்துள்ளன. அதேபோல், இந்நிறுவனங்களின் கடன்கள் கடந்த 2012-13-ல் 9 சதவிகிதம் அதிகரித்து 14.5 பில்லியன் டாலராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: