Sunday, September 14, 2014

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் வாகை சந்திரசேகர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்


இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் வாகை சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது எனது மனைவி ஜெகதீசுவரியின் சகோதரி மகன் ஆர்.டி.பகிரதன் என்பவர் நிலக்கோட்டை மலையகவுண்டன்பட்டியில் 38 சென்டு நிலத்தை சுப்பம்மாள், பாப்பம்மாள் ஆகியோரிடம் இருந்து வாங்கி உள்ளார். பாகப்பிரிவினை மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய இந்த சொத்தை சுப்பம்மாள், பாப்பம்மாள் ஆகியோர் மோசடியாக பகிரதன் என்பவருக்கு விற்று விட்டதாக ஈரோட்டை சேர்ந்த கவுசல்யா என்பவர் திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் என் மீதும், எனது மனைவி, பகிரதன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகிரதன் எனது பினாமி என்று கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான், தி.மு.க.வை சேர்ந்தவன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜி.சந்திரசேகர், டி.கலைச்செழியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments: