Monday, September 15, 2014

பட தலைப்பு பற்றி விமர்சனம்: அமீர் பேச்சு எங்களை புண்படுத்திவிட்டது- திலகர் பட இயக்குனர் அறிக்கை


திலகர் படத்தின் இயக்குனர் பெருமாள்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ‘திலகர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசுகையில், ‘‘இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார்நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்ட பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்று பெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர். எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயனபடுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்’’ என்று கூறியிருந்தார். விழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் முத்துராமனை பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது. யார் யார் அதில் நடிக்கிருக்கிறார்கள். கதை எதைப்பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டு வருவார். அமீருக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகில் அழைத்து கதை எதைப்பற்றியது? ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன். திலகர் படத்தின் கதையையோ அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன். சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப் போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால். இந்தப் படத்தின் தலைப்பு திலகர். கதாநாயகனின் பெயர். இது ஒரு சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங்குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது எனது படம். திலகர், சுபாஷ் சந்திரபோஸ் எனப்பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது. நேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம். ஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர் முக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம். திலகர் மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடித்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல. அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டது. ‘திலகர்’ திரைப்படத்தின் கதை. எதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக் கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல. மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே. ‘ராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ‘ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா அமீர் படமாக்கியிருந்தார். இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக் கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை அமீர் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: