Sunday, September 28, 2014

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்–மந்திரி இன்று மாலை தேர்வு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். முதல்–அமைச்சரின் கூட்டுப் பொறுப்பில் அமைச்சரவை இடம் பெறுகிறது. எனவே, முதல்–அமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்ததால் மந்திரிகளும் பதவியை இழக்கிறார்கள். எனவே, புதிய முதல்– அமைச்சர் மற்றும் புதிதாக அமைய உள்ள அமைச்சரவை பற்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். இதற்கான எம்.எல்.ஏ.க்கள் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் அ.தி.மு.க.வில் 148 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றன. புதிய முதல்–அமைச்சரை தேர்வு செய்வதற்கான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தயாராக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பையொட்டி பல எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூர் சென்றனர். இன்று மதியத்துக்குள் அனைவரும் சென்னை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 மணிக்குள் எல்லா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வந்து விட்டால் கூட்டம் உடனே தொடங்கி விடும். இல்லையெனில் மாலை 6 மணிக்கு பிறகு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. ஜெயலலிதாவுக்குப் பதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செந்தில்பாலாஜி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலாபால கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரில் ஒருவர் முதல்–அமைச்சர் பதவிக்கு தேர்ந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது. என்றாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பெங்களூர் கோர்ட்டில் ஆஜரான ஜெயலலிதா, நீதிபதி தீர்ப்பு கூறுவதற்கு முன்பும், தீர்ப்பை அறிந்த பிறகும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார். இன்று காலையும் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார். எனவே ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்– மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற போது 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை 6 மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா விருப்பப்படி நடந்து கொண்டார். பின்னர் தண்டனை ரத்தானதும் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல் – அமைச்சர் ஆனார். இதனால் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எனவே ஓ.பன்னீர் செல்வம்தான் அடுத்த புதிய முதல்– அமைச்சர் ஆவார் என்று தெரிகிறது.

No comments: