Thursday, March 17, 2011

சென்னையில் 3 இடங்களில் போட்டி; நாடாளும் மக்கள் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டி; பட்டியலை நடிகர் கார்த்திக் வெளியிட்டார்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறோம். இது குறித்து முறையாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருக்கு கடிதம் அளித்து இருக்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் 4 பக்க கடிதத்தையும் அனுப்பியிருக்கிறோம்.

எதனால் வெளியே வந்தோம்? என்பதை திரும்ப நினைத்து பார்க்க விரும்பவில்லை. தன்மானத்தை இழந்து எங்கேயும் இருக்க முடியாது. எங்களை ஏமாற்றினால் பரவாயில்லை. மக்களை அவர்கள் ஏமாற்றாமல் இருந்தால் சரி. மக்களும் ஏமாறமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நல்லவர்கள் யார் என்பதை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் அவருக்கே இந்த நிலைமை இருக்கிறது. அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி வந்து தனி அணி அமைத்தால் நீங்கள் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள்.

அவர் அழைத்தால், அவருடைய கொள்கையும், எங்கள் கொள்கையும் ஒன்றாக இருந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம். ஆனால் கூட்டணி என்றாலே எங்களுக்கு இப்போது அலர்ஜியாக இருக்கிறது. நாங்கள் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம். அதில் 30 தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிடுவோம்.

இன்று முதல் (வியாழக்கிழமை) ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு மற்றும் நேர்காணல் நடத்த இருக்கிறேன். குறிப்பிட்ட சில தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நான் போட்டியிடுவேன்.

வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளை நடிகர் கார்த்திக் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

1. சங்கரன்கோவில். 2. வாசுதேவநல்லூர். 3. கடையநல்லூர். 4. தென்காசி. 5. ஆலங்குளம். 6. திருநெல்வேலி. 7. பாளையங்கோட்டை. 8. அம்பாசமுத்திரம். 9. நான்குநேரி. 10. ராதாபுரம். 11. ராமநாதபுரம். 12. முதுகுளத்தூர். 13. அருப்புக்கோட்டை. 14. சாத்தூர். 15. விருதுநகர். 16. சிவகாசி. 17. ஸ்ரீவில்லிபுத்தூர். 18. ராஜபாளையம். 19. விளாத்திக்குளம்.

20. ஒட்டாபிடாரம். 21. கோவில்பட்டி. 22. தேனி. 23. போடிநாயக்கனூர். 24. கம்பம். 25. பல்லாடம். 26. திருப்பூர் வடக்கு. 27. திருப்பூர் தெற்கு. 28. திருமங்கலம். 30. உசிலம்பட்டி. 31. திருப்பரங்குன்றம். 32. மைலாப்பூர். 33. தியாகராயநகர். 34. அண்ணாநகர். 35. திருவாடனை.

நடிகர் கார்த்திக் அறிவித்த தொகுதிகளில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: