Thursday, March 17, 2011

தே.மு.தி.க., ம.தி.மு.க., கம்யூ. இணைந்து 3-வது அணி உருவாகுமா?அ.தி.மு.க.கூட்டணியில் பிளவு

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. இரு அணிகளிலும் இடம் பெற்ற கட்சிகள் எவை-எவை என்பது கடந்த மாதம் தெரிய வந்தது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. தி.மு.க. அணியில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்கப்பட்ட போது, கூட்டணி உடைந்து விடுமோ என்ற அளவுக்கு உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தனர். இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் சுமூகமாக நடந்து முடிந்தது. தற்போது தி.மு.க. அணியில் உள்ள காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன. இதனால் தி.மு.க. கூட்டணியில் எந்த சிக்கலும் எழவில்லை.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் உள்பட 17 கட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப் பட்டது. இதுதான் மெகா கூட்டணி என்று அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போது, அ.தி.மு.க. அணி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பதாக கருதப் பட்டது.

ஆனால் ம.தி.மு.க. மற்றும் இடது சாரிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தையை நேரடியாகவும், பல சுற்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியும் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவை எட்ட இயலவில்லை. குறிப்பாக ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கும் என்பதில் பேச்சுவார்த்தைத் தொடங்கியதில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாக இருந்த ம.தி.மு.க.வுக்கு உரிய இடங்களையும், கவுரவத்தையும் அ.தி.மு.க. தராதது இரு கட்சி தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ம.தி.மு.க.வினர் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்தே பேசினார்கள். இறுதியாக அவர்கள் 21 தொகுதிகள் தந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருந்தனர்.

ஆனால் 8 இடங்களுக்கு மேல் தர இயலாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியபோது, இந்த தகவலை அறிந்து ம.தி.மு.க.வினர் மட்டுமின்றி எல்லாருமே அதிர்ச்சி அடைந்தனர். இதுவே அ.தி.மு.க. அணியில் சிக்கல் முற்ற காரணமாகி விட்டது.

இந்த நிலையில் தே.மு. தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இது அந்த கட்சிகளின் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதிகள் எவை-எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்று அ.தி.மு.க. 160 தொகுதிகளுக்குரிய இடம் மற்றும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க. அணி உடையத் தொடங்கியுள்ளது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களுக்கு என்று சில தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதின. அந்த தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்த கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.விடம் பட்டியல் கொடுத்திருந்தனர்.

ஆனால் கூட்டணி கட்சிகளின் இந்த பட்டியலையும், கோரிக்கைகளையும் அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டணிக் கட்சியினர், எந்தெந்த தொகுதிகளை விரும்பி கேட்டார்களோ, அந்த தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அந்த வகையில் 17 தொகுதிகளை தே.மு. தி.க. இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக் கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ண சாமி புதிய தமிழகம் கட்சிக்காக கேட்ட 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்த முடிவு தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான நிலைக்கு இந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வின் தன்னிச்சையான முடிவால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னையில் மாநிலக் குழு அலுவலகத்தில் கூடி தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்து வருகிறார்கள். 2006-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்ற 6 தொகுதிகளை இந்த தடவை அ.தி.மு.க. எடுத்துக் கொண்டது குறித்து பேசினார்கள்.

இது போல இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யும் மாநில நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்து வருகிறது. தே.மு.தி.க.வும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில் அ.தி. மு.க.வின் முடிவால் அதிருப்திக்குள்ளாகி உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தே.மு.தி.க. தலைமையில் 3-வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு அமைப்புகள் சேரும்போது, 3-வது அணி பலம் பொருந்தியதாக மாறும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த கட்சிகளிடம் ஒரு மித்த கருத்தை உருவாக்க இந்த கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 3-வது அணி உருவாகுமா? என்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்து விடும்.

No comments: